கொழும்பில் இதுவரை 1,098 கொரோனா மரணங்கள் பதிவு 

கொழும்பில் இதுவரை 1,098 கொரோனா மரணங்கள் பதிவு 

by Bella Dalima 12-10-2021 | 10:30 AM
Colombo (News 1st) கொழும்பில் இதுவரை 1,098 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்தார். அத்துடன், 25,833 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு நகரில் 30 வயதிற்கு மேற்பட்ட 92 வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர்களில் 68 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக கொழும்பு பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ருவன் விஜேமுனி மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, 30 வயதிற்கு மேற்பட்ட 100 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக COVID நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், டெல்டா வைரஸின் தன்மைக்கேற்ப அது பரவக்கூடும் என்பதால், நாட்டு மக்கள் சுகாதார விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுவது அவசியம் என அவர் கூறினார். 20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்கள் கூடிய விரைவில் ஏதேனுமொரு தடுப்பூசியை பெற்றுக்கொள்வது சிறந்தது என அவர் வலியுறுத்திக் கூறினார். பொய் பிரசாரங்களை கருத்திற்கொண்டு தடுப்பூசியை பெறாமல் இருப்பது ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டார்.