ராகலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்தமை விபத்தா? கொலையா?

by Staff Writer 09-10-2021 | 8:24 PM
Colombo (News 1st) நுவரெலியா - ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் பிரேத பரிசோதனைகளில் பகிரங்க அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தேவைப்படின் மீண்டும் சடலங்களை தோண்டியெடுத்து பரிசோதனை நடத்துவதற்கான இயலுமை உள்ளது. நுவரெலியா நீதிமன்ற சட்ட வைத்திய அதிகார சீ.கே. ராஜகுருவினால் இந்தப் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தீச் சம்பவம் ஏற்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு மோகனதாஸ் எரோஷனின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடி கேக் வெட்டப்பட்டுள்ளது. பிறந்தநாள் கொண்டாடிய ஒரு வயது குழந்தையான எரோஷன், 11 வயதுடைய அவரது சகோதரன், 32 வயது தாய் நதியா தங்கையா, 60 வயதுடைய தாத்தா, 55 வயதுடைய பாட்டி ஆகிய ஐவரும் தீச் சம்பவத்தில் பலியாகினர். இந்த மரணங்கள் திடீர் விபத்தால் வீட்டில் ஏற்பட்ட தீச் சம்பவத்தால் இடம்பெற்றனவா? அல்லது கொலையா? தீச் சம்பவத்துக்கான காரணம் உறுதி செய்யப்படாமல் இருக்கும் இந்த மரணங்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இந்த வீடு இரண்டு அறைகளைக் கொண்டதாக அமைந்திருந்ததுடன் ஒரு பகுதி மாத்திரமே சுவர் எழுப்பப்பட்டிருந்தது. மற்றைய பகுதிகள் தகரங்களால் மறைக்கப்பட்டிருந்ததுடன் உள்ளே பொலித்தீன் உறைகளால் அறைகள் பிரிக்கப்பட்டிருந்தன. குறித்த வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வாசல் கதவு மாத்திரமே இருந்தது. நெரிசல் மிகுந்த இந்தப் பகுதியிலிருந்த வீட்டை அண்மித்து பல வீடுகள் இருப்பதை காணமுடிந்தது. தீ பிடித்தமைக்கான காரணமாக எரிவாயு கசிவோ அல்லது மின் ஒழுக்கோ இதுவரை உறுதி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. அப்படியானால் வீட்டினுள் எவ்வாறு தீப்பிடித்தது? ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் இத்தகையதொரு வீட்டினுள் தீப் பிடித்ததை வீட்டார் உணராமல் இருந்து எவ்வாறு? தீ பிடித்த தினத்தன்று செயற்பாடு அருகிலுள்ளவர்கள் கூறும் விதத்தில் இந்த வீட்டிலுள்ளவர்கள் பொதுவாக உறங்கச் செல்வதற்கு இரவு 11 மணி கடந்துவிடும். எனினும், பிறந்தநாள் கொண்டாட்ட தினத்தன்று அவர்களின் செயற்பாட்டில் சிறு மாற்றம் இருந்ததாக அருகில் வசிப்பவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் பொதுவாக இரவு 11 மணிக்கு பின்பே உறங்கச் செல்வார்கள். வீட்டில் சத்தம் கேட்கும். எனினும், நெருப்பு பற்றி எரியும் சந்தர்ப்பத்திலும் சத்தமேதும் இருக்கவில்லை. உயிரிழந்த ஐவரும் வழமைக்கு மாறாக முன்கூட்டியே உறங்கச் சென்றார்களா? இல்லையேல் அவர்கள் வேறு ஏதேனும் பிரச்சினையில் சிக்கினார்களா? சடலங்கள் காணப்பட்ட இடம் குடும்ப உறவினர்கள் நால்வரும் உயிரிழக்கும் தருணத்தில் ஒரே கட்டிலில் இருந்ததற்கான காரணம் என்ன? பிறந்த நாளுக்கு கொண்டுவரப்பட்ட கேக் இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு இரு தடவைகள் கேக் கொண்டுவரப்பட்டுள்ளது. அது ஏன்? இதேவேளை, வீட்டிலிருந்த செல்லப் பிராணியான நாய் இரண்டு நாட்களாக இருந்த விதம் கவனத்தை ஈர்த்தது. பிறந்தநாளுக்கு கொண்டுவரப்பட்ட கேக் மற்றும் அதனை உண்டவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதில்லையா? உயிரிழந்த நதியாவின் இரண்டாவது குழந்தைக்கே நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நதியாவுக்கு இரண்டு திருமணங்களில் இரண்டு குழந்தைகள் இருந்ததுடன், இரண்டாவதாக திருமணம் செய்தவரின் குழந்தைக்கே அன்று முதலாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துவதன் மூலமே உண்மையை கண்டறிய முடியும். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்