புது உத்வேகத்துடன் பணியாற்ற தயாராகுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

by Staff Writer 07-10-2021 | 8:05 PM
Colombo (News 1st) புது உத்வேகத்துடன் பணியாற்ற தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மாவட்ட செயலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காணொளி மூலம் அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் ஜனாதிபதி இன்று (07)  கலந்துரையாடினார். கொரோனா தொற்று காரணமாக 2 வருடங்கள் பொருளாதாரம் வீழ்ச்சிகண்ட நிலையில், அதை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதுடன் அந்த இலக்கை அடைவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து இதன்போது ஜனாதிபதி தௌிவுபடுத்தியுள்ளார். விவசாயத்தை முதன்மைப்படுத்தியுள்ள 70 வீதமான கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். சேதனப் பசளை பாவனையின் மூலம் பசுமை பொருளாதாரத்தை உருவாக்குதவற்கான சவாலை வெற்றிகொள்ள வேண்டும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். நிலக்கரிக்கு பதிலாக மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியை ஊக்குவித்தல், சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புதல், முதலீடுகளை மேம்படுத்தல் என்பனவும் இதில் உள்ளடங்குகின்றன. இந்த இலக்குகளை அடைவதற்கு தடையாக இருக்கின்ற சுற்றுநிரூபங்கள் மற்றும் சட்ட ஒழுங்குகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை இதன்போது மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டினர்.