by Staff Writer 07-10-2021 | 9:04 PM
Colombo (News 1st) இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றானதும் கொலு வைத்து கொண்டாடும் வழிபாடுமான நவராத்திரி விரதம் இன்று (07) ஆரம்பமானது.
பூலோக வாழ்வுக்கு இன்றியமையாத கல்வி, செல்வம், வீரத்தை வேண்டி விரதமிருப்பதே நவராத்திரி விழாவாகும்.
கல்விக்கு அதிபதியான கலைமகளையும் செல்வத்துக்கு அதிபதியான அலைமகளையும் வீரத்துக்கு அதிபதியான மலைமகளையும் வேண்டி நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த விரத காலத்தில் பாடசாலைகள் மற்றும் இந்துக்களின் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.
அந்த வகையில் யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விரதம் பூஜையுடன் இன்று சிறப்பாக ஆரம்பமானது.
மங்கள வாத்தியங்கள் முழங்க, பிராமணர்கள் வேதபாராயணங்கள் ஓத, வீரத்தின் அடையாளமாகப் போற்றப்படும் துர்க்கை அம்மனுக்கு விசேட பூஜைகளும் வசந்த மண்டப பூஜையும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டன.
இதேவேளை, கொழும்பு - வௌ்ளவத்தை மயூராபதி ஶ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி கொலு வைக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
இந்திய தூதரக கலாசார பணிப்பாளர், கலாநிதி ரேவந்த் விக்ரம் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
ஆலயத்தின் அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இன்றைய விழாவை சிறப்பித்தன.