நாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க முடியும்: திருக்குமார் நடேசன் கடிதம்

by Staff Writer 06-10-2021 | 8:26 PM
Colombo (News 1st) பண்டோரா ​பேப்பர்ஸில் தமது பெயர் வௌியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவரான வர்த்தகர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இந்த விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு திருக்குமார் நடேசன் கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணையில் தாமும் தமது மனைவியும் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்படுகின்ற அனைவரும் குற்றவாளிகள் என அநேகமானவர்கள் நம்பினாலும் உண்மை அதுவல்ல எனவும் திருக்குமார் நடேசனின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்தல் அல்லது சுயாதீன விசாரணைக்கு அந்த ஆவணங்களை வழங்குதலே நிருபமா ராஜபக்ஸ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இலகுவான தீர்வு என சிரேஷ்ட ஊடகவியலாளர் நாமினி விஜேதாச தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், நிருபமா ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியுடன் தொடர்புடையவை என்பதே அதற்கான காரணமாகும்.