ஏழாலையில் தாக்குதல் நடத்தியவர்களை தப்பிக்க விட்ட சம்பவம்: பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

by Staff Writer 06-10-2021 | 8:31 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - ஏழாலையில் தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அழைப்பு விடுத்துள்ளது. சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட மாகாண பொறுப்பதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார். அதற்கமைய, எதிர்வரும் 8 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட மாகாண பொறுப்பதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார். ஏழாலையில் கடந்த 04 ஆம் திகதி இரவு வீடொன்றினுள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை தாக்கினர். தாக்குதல் மேற்கொண்டவர்களை சிலர் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.