மன்னார் பொலிஸ் கைது செய்தவரிடம் வாக்குமூலம் பதிவு

மன்னார் பொலிஸாரால் கைதாகி உயிரிழந்தவர் தொடர்பில் அவருடன் கைதானவரிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 05-10-2021 | 8:02 PM
Colombo (News 1st) மன்னாரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சந்தேகநபருடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று நேரடியாக சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபரிடம் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட மாகாண பொறுப்பதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார். சந்தேகநபரிடம் பெற்றப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தௌிவுபடுத்திக்கொள்ள மீண்டும் பொலிஸாரிடம் தகவல்களை பெறவுள்ளதாகவும் அவர் கூறினார். அதற்கமைய, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் முன்னெடுக்கும் என ஆணைக்குழுவின் வட மாகாண பொறுப்பதிகாரி தங்கவேல் கனகராஜ் சுட்டிக்காட்டினார். இதேவேளை, உயிரிழந்த சந்தேகநபரின் ஜனாஸா நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. அதிக போதைப்பொருள் பாவனையால் அவர் உயிரிழந்திருக்கலாம் என பிரேத பரிசோதனையின் பின்னர் மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மலிந்த டி சில்வா தெரிவித்தார். எனினும், சடலத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உயிரிழந்த சந்தேகநபரின் உடலில் அண்மையில் ஏற்பட்ட சிறு காயங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், சந்தேகநபர் தாக்கப்பட்டதால் உயிரிழந்தமைக்கான சான்றுகள் கண்டறியப்படவில்லை என மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மலிந்த டி சில்வா சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.

ஏனைய செய்திகள்