சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பேஸ்புக் நிறுவனத்திற்கு 700 கோடி டொலர்கள் இழப்பு

சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பேஸ்புக் நிறுவனத்திற்கு 700 கோடி டொலர்கள் இழப்பு

சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பேஸ்புக் நிறுவனத்திற்கு 700 கோடி டொலர்கள் இழப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Oct, 2021 | 4:45 pm

Colombo (News 1st) உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் திடீரென முடங்கியதற்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.

உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் என பல்வேறு செயலிகளை நிர்வகித்து வருகிறது.

உலகம் முழுவதும் பேஸ்புக் சேவையை சுமார் 285 கோடி வாடிக்கையாளர்களும், வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடி வாடிக்கையாளர்களும், இன்ஸ்டாகிராமை சுமார் 138 கோடி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 4) இரவு 9.15 மணியளவில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் திடீரென முடங்கின. சேவை முடங்கியதை அறியாத பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டது என நினைத்து பல்வேறு செட்டிங்களை மாற்றி சோதனை செய்தனர். பலர் செயலிகள் இயங்காததை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பின் சில நிமிடங்களில் Server Down எனும் Hashtag ட்விட்டரை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம், தங்களின் வலைத்தளம் முடங்கி இருப்பதாக அறிவித்தது. இதேபோன்று மற்ற தளங்களும் இந்த தகவலை வெளியிட்டன.

‘முடங்கிய சேவையை திரும்ப செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் சரியாகி விடும்’ என பேஸ்புக் அறிவித்தது. எனினும், நீண்ட நேரம் இந்த பிரச்சினை சரியாகவே இல்லை. இன்று அதிகாலை இந்த சேவைகள் சரியாகின. உலகம் முழுக்க சுமார் 7 மணிநேரம் சேவை முடங்கி, பின் செயற்பாட்டுக்கு வந்தது.

7 மணிநேர முடக்கத்தால் பேஸ்புக் நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. அமெரிக்காவின் நாஸ்ட்காம் பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு 700 கோடி டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் மீண்டும் சரியாகின்றன. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அக்கறை செலுத்தும் நபர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எந்தளவு நம்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும்’ என மார்க் சக்கர்பர்க் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்