இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயங்களுக்கு இடமளியோம்: ஜனாதிபதி

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயங்களுக்கு இடமளியோம்: ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

05 Oct, 2021 | 7:50 pm

Colombo (News 1st) இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கையை பயன்படுத்த இடமளிக்க போவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று உறுதியளித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வௌியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை இன்று சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

சீனாவுடனான தொடர்புகள் தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லையென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள குறைகள் மற்றும் பலத்தை கண்டறிந்து செயற்படுவதன் தேவை தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி தாம் சிறந்த புரிதல் கொண்டிருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான தேவை தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பென்று தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரின் போது உரையாற்றி, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாகவும், ஹர்ஷ் வர்தன் ஷரிங்லாவிடம் கூறியுள்ளார்.

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் நீண்டகாலமாக இரு நாட்டு மீனவர்களும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்திற்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாட்கள் விஜயத்தை முடித்துக்கொண்ட இந்திய வௌியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று மாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்