ATM இயந்திரங்களை உடைத்து கொள்ளை; சந்தேகநபர் கைது

ATM இயந்திரங்களை உடைத்து 76,24,000 ரூபா பணம் கொள்ளை; சந்தேகநபர் கைது

by Bella Dalima 04-10-2021 | 3:17 PM
Colombo (News 1st) அநுராதபுரம் மற்றும் மின்னேரியா பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு ATM இயந்திரங்களை உடைத்து, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். எப்பாவல பகுதியை சேர்ந்த 30 வயதான குறித்த சந்தேகநபர், அநுராதபுரம் பொலிஸாரால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ATM இயந்திரத்தை உடைத்து 76,24,000 ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை, நேற்று சந்தேகநபர் கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்த 29,80,000 ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, 24,90,000 மதிப்புள்ள சிறிய ரக லொறியொன்றும், 9,50,000 ரூபா மதிப்புள்ள மோட்டார் சைக்கிளும் 1,70,000 ரூபா மதிப்புள்ள ஏனைய வீட்டுப் பாவனை பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் ATM இயந்திரத்தை உடைப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்கள், CCTV தரவுகள் உள்ளடங்கிய DVR இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் மற்றும் மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர் இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.