பொலிஸாரால் கைதான நபர் உயிரிழப்பு; SLHRC விசாரணை

மன்னாரில் பொலிஸாரால் கைதான நபர் உயிரிழப்பு; இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

by Bella Dalima 04-10-2021 | 11:30 AM
Colombo (News 1st) மன்னாரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உயிரிழந்த சந்தேகநபருடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட மாகாண பொறுப்பதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார். உயிரிழந்த இளைஞரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இளைஞரின் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என நேற்று உறுதி செய்யப்பட்டது. மன்னார் - எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் கடந்த முதலாம் திகதி இரவு முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்திய மன்னார் பொலிஸார், போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்தனர். இவர்களில் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எருக்கலம்பிட்டி - தர்கா நகர் பகுதியை சேர்ந்த 29 வயதான சம்சுதீன் மொஹமட் ரிம்ஷான் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞருடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்