பிரேமலால் ஜயசேகரவின் மனு மீது விரைவில் விசாரணை

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மீதான விசாரணை விரைவில்

by Bella Dalima 04-10-2021 | 4:49 PM
Colombo (News 1st)  இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. குறித்த மனு இன்று பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் குழாத்தினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2015 ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவிருந்த மக்கள் சந்திப்பிற்காக மேடை அமைத்துக்கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரை கொலை செய்தமை மற்றும் இருவரை படுகாயமடையச் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பிரதிவாதியான பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்து செய்து, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரி அவர்கள் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.