இந்திய வௌியுறவு செயலாளர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்

by Bella Dalima 04-10-2021 | 12:58 PM
Colombo (News 1st) இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வௌியுறவு செயலாளர் ஷர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று சில தரப்பினரை சந்திக்கவுள்ளார். அவர் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தொடர்பை விரிவுபடுத்தக்கூடிய விதம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய வௌியுறவு செயலாளர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு இதற்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்திய வௌியுறவு செயலாளர் நேற்று மூன்று மாவட்டங்களுக்கு சென்றதுடன், திருகோணமலை எண்ணெய் குதங்களையும் பார்வையிட்டார். அவர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது, பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டதாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்திய வௌியுறவு செயலாளர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவையும் இன்று சந்தித்தார். COVID தொற்றினால் பாதிக்கப்பட்ட பொருளாதார துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளதாக வௌியுறவு செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக இந்திய வர்த்தக துறையினர் இந்நாட்டில் முதலீடு செய்கின்றமை தொடர்பிலான இயலுமை தொடர்பில் ஆராய்வதாக இந்திய வௌியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார். இந்திய வலயத்தின் முன்னிலை நாடு, அயல் நாடு என்ற ரீதியில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் இலங்கைக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பானது பாராட்டுதற்குரியது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.