மன்னார் பொலிஸாரால் கைதாகி உயிரிழந்தவர் அதிக போதைப்பொருள் பாவனையால் இறந்திருக்கலாம் என சந்தேகம்

மன்னார் பொலிஸாரால் கைதாகி உயிரிழந்தவர் அதிக போதைப்பொருள் பாவனையால் இறந்திருக்கலாம் என சந்தேகம்

எழுத்தாளர் Bella Dalima

04 Oct, 2021 | 6:45 pm

Colombo (News 1st) மன்னாரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சந்தேகநபரின் பிரேத பரிசோதனை இன்று நடத்தப்பட்டது.

அதிக போதைப்பொருள் பாவனையால் அவர் உயிரிழந்திருக்கலாம் என மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மலிந்த டி சில்வா தெரிவித்தார்.

எனினும், சடலத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த சந்தேகநபரின் உடலில் அண்மையில் ஏற்பட்ட சிறு காயங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், சந்தேகநபர் தாக்கப்பட்டதால் உயிரிழந்தமைக்கான சான்றுகள் கண்டறியப்படவில்லை என மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மலிந்த டி சில்வா சுட்டிக்காட்டினார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த சந்தேகநபருடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று காணொளியூடாக விசாரணை மேற்கொண்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபரிடம் நாளைய தினம் நேரில் சென்று வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட மாகாண பொறுப்பதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.

மன்னார் – எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் கடந்த முதலாம் திகதி இரவு முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்திய மன்னார் பொலிஸார், போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்தனர்.

இவர்களில் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எருக்கலம்பிட்டி தர்கா நகர் பகுதியை சேர்ந்த 29 வயதான சம்சுதீன் மொஹமட் ரிம்ஷான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலில் இவர் உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞருடன் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்