பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக ஐரோப்பிய தூதுக்குழுவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக ஐரோப்பிய தூதுக்குழுவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

04 Oct, 2021 | 8:29 pm

Colombo (News 1st) மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு அமைய, செயற்படுவதாக ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஸ ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் இன்று தெரிவித்துள்ளார்.

மிரிஹானையில் உள்ள ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச் சலுகையை தொடர்வதற்கு ஏற்கனவே இலங்கை இணக்கம் தெரிவித்த விடயங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காகவே இவர்கள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்திலுள்ள ஒருசில சரத்துக்களில் உடனடி திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி பிரதிநிதிகள் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு அமைய நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் காலத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்று அவசியம் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மீது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தடியடித் தாக்குதல், நீர்த்தாரை பிரயோகம் அல்லது கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டங்களுக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லவும் தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் புலம்பெயர் சமூகம் உள்ளிட்ட உள்நாட்டு வௌிநாட்டு தரப்பினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஐ.நா பொதுச்சபையில் தாம் சுட்டிக்காட்டியதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவதானித்த விடயங்கள் அடங்கிய விரிவான அறிக்கையொன்றை இந்த குழுவினர் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்