இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் வருகை

இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் நாட்டிற்கு வருகை

by Staff Writer 03-10-2021 | 10:53 AM
Colombo (News 1st) இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நேற்றிரவு கொழும்பை வந்தடைந்தார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அழைப்பிற்கு அமைய, அவரது இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரை வௌிவிவகார அமைச்சின் செயலாளர் சந்திக்கவுள்ளார். ஷர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார். இந்திய வௌிவிவகார செயலாளர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆளுந்தரப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. COVID தொற்று நிலைமையினால் வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்பிலும், இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடி தொடர்பிலும் பொருளாதார ரீதியில் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு குறித்தும் மதிப்பீடு செய்வதற்கு, இந்தியப் பிரதிநிதிகளுக்கு இந்த விஜயத்தின் போது சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் த ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிற்கு மேலதிகமாக, மாலைத்தீவின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலில் பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் கடல்சார் கடத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கக்கூடிய விதம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் மொரிஷியஸ், சீஷெல்ஷ் மற்றும் பங்களாதேஷ் தத்தமது யோசனைகளை முன்வைப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்