அம்பாறையில் இந்திய – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி

அம்பாறையில் இந்திய – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2021 | 8:42 pm

Colombo (News 1st) இந்திய – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி நாளை (04) அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது.

மித்ர சக்தி என இந்த கூட்டுப் பயிற்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து 12 நாட்களுக்கு பயிற்சி இடம்பெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ளவுள்ள இந்திய இராணுவத்தினர் 120 பேரை ஏற்றிய விசேட விமானம், மத்தளை சர்வதேச விமான நிலையத்தை நேற்று வந்தடைந்தது.

கேர்ணல் பிரகாஷ் குமாரின் தலைமையில் இந்திய இராணுவம் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளது.

மித்ர சக்தி கூட்டு இராணுவப் பயிற்சியின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் G.F.கொடெல்வத்த மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரால் இவர்கள் வரவேற்கப்பட்டனர்.

53 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, இந்த பயிற்சியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தளையை வந்தடைந்த இந்திய இராணுவத்தினர், அங்கிருந்து அம்பாறை போர்ப் பயிற்சி பாடசாலைக்கு சென்றதுடன், இராணுவ பயிற்சியின் பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டனர்.

இலங்கை இராணுவத்தின் விஜயபாஹூ படையணியுடன் அம்பாறை போர்ப்பயிற்சி பாடசாலையில் இந்த பயிற்சி இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, COVID ஒழிப்பு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, Bio-Bubble முறைமையில் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பயிற்சியின் போது கலகத்தடுப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இருதரப்பு அனுபவங்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளதுடன், உள்ளக செயற்பாடுகளும் மேம்படுத்தப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்