தடுப்பூசி ஏற்றிக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

by Bella Dalima 02-10-2021 | 11:00 AM
Colombo (News 1st) முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாட்டிற்கு வருகை தருவதற்கு ஒன்லைன் மூலம் விசா பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மீளவும் வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்ட புதிய வழிகாட்டல்களுக்கு அமைய இதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க தெரிவித்தார். ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஒன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் கூறினார். இரண்டு தடுப்பூசிகளையும் பெறாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தரும் மாதங்களாகும் என தம்மிகா விஜேசிங்க சுட்டிக்காட்டினார். தற்போதைய சூழ்நிலையில் 2019 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட இரண்டு மாதங்களில் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையையேனும் இந்த வருடத்தில் எதிர்பார்ப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, டிசம்பர் மாதம் ஆகும் போது 4 இலட்சம் வரையிலான சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார். இதற்காக பல நாடுகளை இலக்காகக் கொண்டு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.