பயங்கரவாத தடுப்புச் சட்ட மீளாய்வு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை தௌிவூட்டியுள்ள இலங்கை

by Bella Dalima 02-10-2021 | 1:19 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தை தௌிவூட்டியுள்ளது. சர்வதேச தரம் மற்றும் நியமங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட கால எல்லைக்குள் மீளாய்வை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கை அரசு இதன்போது தௌிவுபடுத்தியுள்ளது. ஆட்சி , சட்டவாட்சி, மனித உரிமைகள் தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான ஐந்தாவது செயற்குழு கூட்டத்தின் பின்னர் வௌியிடப்பட்டுள்ள இணைந்த ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கூட்டத்திற்கு முன்னர் இந்த விடயங்களில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு இரு தரப்பினரும் இதன்போது இணங்கியுள்ளனர். பயங்கரவாதம் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக செயற்படும் அதேவேளை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தரங்களுக்கு அமைய செயற்படுவதற்கான தேவை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் பிரச்சினைகள், அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், குரோதமான கருத்துக்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.