ஓய்வு பெறுவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு

by Bella Dalima 02-10-2021 | 5:49 PM
Colombo (News 1st) அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட போவதில்லை எனவும், அதற்கு பதிலாக அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடெர்ட் (Rodrigo Duterte) அறிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி பதவியின் இரண்டாவது தவணைக்காக போட்டியிட முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தாம் து​ணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரொட்ரிகோ கடந்த மாதம் அறிவித்திருந்தார். இருப்பினும், தாம் அதற்கு தகுதியற்றவர் என்ற கருத்து பிலிப்பைன்ஸ் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதனால், போட்டியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் மகள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஊகங்கள் வலுப்பெற்று வரும் நிலையிலேயே, இந்த நகர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றங்களை ஒழித்தல், பிலிப்பைன்ஸில் புரையோடிப்போயிருந்த போதைப்பொருள் கடத்தல் நெருக்கடியை சீர்செய்தல் என்ற பிரசாரத்துடன், ஒரு வலிமையான தலைவராக கருதப்பட்ட இவர் 2016 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்திருந்தார். இவரது பதவிக்காலத்தில், போதைக்கெதிரான போர் என அவரால் அழைக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் ஆயிரக்கணக்கான சந்தேகநபர்களை சட்டத்திற்கு முரணாக கொல்லும் ஊக்கத்தை பொலிஸாருக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. 6 ஆண்டுகள் கொண்ட ஒரு தவணைக்கு மாத்திரம் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான அனுமதியை, ஒரு பிரஜைக்கு பிலிப்பைன்ஸ் அரசியலமைப்பு வழங்குகின்றது. இந்த நிலையில், தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி ரொட்ரிகோவின் மகளும், தென் பிராந்திய நகரான Davao-வின் மேயருமான Sara Duterte-Carpio மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.