உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்

கிராமிய அபிவிருத்திக்காக உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்

by Staff Writer 01-10-2021 | 8:13 PM
Colombo (News 1st) இலங்கையின் கிராமிய அபிவிருத்தி மற்றும் அதனுடன் இணைந்த விவசாயத் துறை தொடர்பான சேவைகளை மேம்படுத்துவதற்காக 500 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வீதி போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பாக, உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் சபை, இந்தக் கடனை வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் வாழும் 16 மில்லியன் மக்கள் நன்மையடைவார்கள் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதனைத்தவிர, இலங்கையின் பெருந்தெருக்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் 95 வீத ஒத்துழைப்பும் பொருட்கள் விநியோகத்தில் 98 வீத ஒத்துழைப்பும் இதன்மூலம் கிடைக்கவுள்ளது. இந்த நிதி வசதியூடாக குறுகிய கால தொழில் வாய்ப்புகள் பலவற்றை ஏற்படுத்த முடியும் என்பதுடன், கொவிட் நிலைமைக்குப் பின்னரான பொருளாதாரத்திற்கு அது உதவியாக அமையும் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் திட்டம் பெருந்தெருக்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், திட்டத்தை மேற்பார்வை செய்வதற்கு தேசிய நடவடிக்கை குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. 10 வருட சலுகைக் காலத்துடன், 28 வருடங்களில் இந்தக் கடன் செலுத்தி முடிக்கப்படல் வேண்டும்.