கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

by Staff Writer 30-09-2021 | 12:20 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று (30) முற்பகல் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. துறைமுக அதிகார சபையின் சார்பில் அதன் தலைவரும் அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக துறைமுகம் மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தினார். 'வெஸ்ட் கன்டெய்னர் இன்டர்நெஷனல் டேர்மினல்' என்ற பெயரில் புதிய கூட்டு நிறுவனத்தினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி அந்த நிறுவனத்தின் மற்றைய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் நிறுவனமும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. அதனடிப்படையில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகள் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் 34 வீத பங்குகள் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கும் 15 வீத பங்குகள் துறைமுக அதிகார சபைக்கும் கிடைக்கின்றன.