அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை இரத்து செய்து வர்த்தமானி வௌியீடு

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை இரத்து செய்து வர்த்தமானி வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2021 | 9:09 am

Colombo (News 1st) அரிசிக்கு விதிக்கப்படும் அதிகபட்ச சில்லறை விலையை விதித்து அரசாங்கத்தினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்து, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அரிசி உற்பத்தியாளர் ஒருவர் ஆலை உரிமையாளருக்கு அரிசியை விற்பனை செய்யவேண்டிய அதிகபட்ச விலையை நிர்ணயித்து கடந்த 02 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படுவதாக புதிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த 02 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, ஒரு கிலோகிராம் கிராம் கீரி சம்பா அரிசியின் விலை 125 ரூபாவாகவும் சம்பா அரிசியின் விலை 103 ரூபாவாகவும் நாட்டரிசியின் விலை 98 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும், நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதனிடையே, நேற்று முன்தினம் (28) பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து அரிசி விற்பனைக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில்,
ஒரு கிலோகிராம் நாட்டரிசி – 115 ரூபா
ஒரு கிலோகிராம் சம்பா அரிசி – 140 ரூபா
ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி – 165 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்