நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை...

நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

by Staff Writer 27-09-2021 | 9:03 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேநேரம், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும் எனவும் இதனால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனைத்தவிர, நிலவும் மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு (27), 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ⭕ காலி மாவட்டம் எல்பிட்டிய மற்றும் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுகள் ⭕ இரத்தினபுரி மாவட்டம் எஹலியகொட, கலவான, குருவிட்ட, நிவித்திகல மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகள் ⭕ மாத்தறை மாவட்டம் அக்குரஸ்ஸ மற்றும் கொடபல பிரதேச செயலாளர் பிரிவுகள் ⭕ கேகாலை மாவட்டம் யட்டியாந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் ⭕ நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்