by Staff Writer 27-09-2021 | 9:00 PM
Colombo (News 1st) முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவினால் மீள பெறப்பட்டுள்ளது.
கொழும்பு, இலக்கம் 5 மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரட்ன முன்னிலையில் இந்த நகர்த்தல் பத்திரம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்கான வழக்கு விசாரணைகள் கொழும்பு, இலக்கம் 2 மேல் நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படவிருந்தது.
இது குறித்து சுட்டிக்காட்டிய நீதவான் மஞ்சுள திலக்கரட்ண, பிறிதொரு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் உத்தரவுகளை பிறப்பிக்க தமக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டார்.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு பிணை வழங்குவதற்கு கடந்த 14 ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் புத்திக்க ஶ்ரீ ராகல நிராகரித்திருந்தார்.
மாவனெல்லையில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்துடன் அசாத் சாலிக்கு தொடர்பில்லை என விசாரணைகளூடாக தெரியவந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, பிணை கோரிக்கையை முன்வைத்தார்.
சந்தேகநபரான அசாத் சாலி, ஊடக சந்திப்பொன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பில் சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அவரை பிணையில் செல்ல அனுமதிக்க முடியாது என சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி வசந்த பெரேரா மன்றில் சுட்டிக்காட்டினார்.
அசாத் சாலி கடந்த மார்ச் 9 ஆம் திகதி வௌியிட்ட அறிக்கை குறித்து ஊடகங்கள் ஒளிபரப்பிய செம்மையாக்கப்பட்ட செய்திகள் மற்றும் செம்மையாக்கப்படாத காட்சிகள் மற்றும் ஒலிப்பதிவுகளை பார்வையிட்ட தமது நீதிமன்றம், நாட்டின் அனைத்து மக்களுக்கும் இன, மத பேதமின்றி செயற்பட வேண்டும் என்பதை அவர் கூறியுள்ளாரே தவிர இனங்களுக்கு இடையில் வேற்றுமையை ஏற்படுத்தும் கருத்து அல்ல என்பதனை உணர்ந்து கொண்டதாக பிரதம நீதவான் புத்திக ஶ்ரீராகல அன்றைய தினம் கூறியிருந்தார்.
சந்தேகநபர் கூறிய கருத்தில் ஒரு பகுதியை மாத்திரம் ஔிபரப்பியமையினால், ஏதாவது வேற்றுமை ஏற்படுமாகவிருந்தால் அதற்கு ஊடகங்கள் பொறுப்புக் கூற வேண்டும் பிரதம நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.