செயற்கையான முறையில் அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டாம்: அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

by Staff Writer 26-09-2021 | 10:54 PM
Colombo (News 1st) செயற்கையான முறையில் அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டாம் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரிசிக்கு நியாயமான விலையை வழங்கத் தவறினால், அரிசி வர்த்தகத்தில் இருந்து விலகப்போவதாக அந்த சங்கம் எச்சரித்துள்ளது. சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை கொள்வனவு செய்வதற்காக ஒரு கிலோகிராம் நட்டரிசி நெல்லுக்கு 50 ரூபாவையும் ஒரு கிலோகிராம் சம்பா நெல்லுக்கு 52 ரூபாவையும் அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. நெல்லை அறுவடை செய்யும் போதே அதனை விட கூடுதலான பணத்தை தாம் செலவிட நேரிட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் நெல்லுக்கான விலையை அதிகரிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசாங்கம் அந்தக் கோரிக்கைக்கு வழங்கிய சாதகமான பதில் காரணமாக விவசாயிகள் அதிக விலைக்கு நெல்லை அரிசி உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்ய முனைந்தனர். தற்போது பிரச்சினை அரிசி உற்பத்தியாளர்களை பற்றியுள்ளது. அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு எவ்வாறு அரிசியை விற்பனை செய்ய முடியும் என்ற கேள்வியை அரிசி உற்பத்தியாளர்கள் முன்வைக்கின்றனர். ஒரு கிலோகிராம் நட்டரிசிக்கு 110 ரூபாவும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசிக்கு 130 ரூபாவும் ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசிக்கு 160 ரூபாவும் என விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாகும்.