Laugfs, Litro இணைந்து புதிய எரிவாயு நிறுவனத்தை உருவாக்க முயற்சி

by Bella Dalima 25-09-2021 | 6:50 PM
Colombo (News 1st) Laugfs மற்றும் Litro நிறுவனங்கள் இணைந்து Siyolit எனும் பெயரில் புதிய நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. சமையல் எரிவாயுவின் விலையேற்றத்துடன் நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 2019 ஜூன் மாதத்தில் உலக சந்தையில் காணப்பட்ட எரிவாயுவின் விலை மற்றும் டொலரின் விலையுடன் ஒப்பிடுகையில், தற்போது காணப்படும் விலையினால் தமது நிறுவனத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக Litro Gas நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, சந்தையில் Laugfs Gas-இற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சில மாதங்களின் பின்னர் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது. அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. எனினும், விலை அதிகரிப்பின் பிரதிபலன் Laugfs எரிவாயுவிற்கு மாத்திரமே கிடைத்துள்ளது. இருந்த போதிலும், நுகர்வோரின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதற்கு Laugfs நிறுவனம் நடவடிக்கை எடுக்காமையை, எரிவாயுவை பெறுவதற்காக காத்திருக்கும் மக்கள் வரிசை புலப்படுத்துகின்றது.