மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளை வரவேற்பதாக ஜனாதிபதி உலக தலைவர்களிடம் தெரிவிப்பு

by Bella Dalima 25-09-2021 | 8:20 PM
Colombo (News 1st) அடுத்த சில தசாப்தங்களுக்கு பாரியளவிலான மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளை வரவேற்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உலக தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் எரிசக்தி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். அனைவராலும் ஏற்கக்கூடிய நம்பகத்தன்மையுடைய நிலையான எரிசக்திகளை பெற்றுக்கொள்வதற்கான இயலுமையை உறுதிப்படுத்துதல் என்ற தொனிப்பொருளில் நேற்று (24) இந்த மாநாடு நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஒன்லைன் மூலம் இந்த மாநாட்டில் உரையாற்றினார். இதன்போது, மனித செயற்பாடுகள் காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளால் உருவாகும் காலநிலை மாற்றங்கள் காரணமாக புவிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தொடர்ந்தும் கவனத்திற்கொள்ளாதிருக்க முடியாது எனவும் அடுத்த சில தசாப்தங்களில் இந்த அச்சுறுத்தலை குறைத்துக்கொள்வதாக இருந்தால், உலகளாவிய ரீதியில் தூய்மையான எரிசக்தி திட்டங்களுக்கு நகர வேண்டியது அவசியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நிலையான எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு பிரவேசிக்க முயற்சித்து வரும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இயலுமை உள்ள அனைத்து அரசுகளிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
நிலையான எரிசக்தி வள அபிவிருத்திக்காக இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. 2030 ஆம் ஆண்டாகும் போது நாட்டின் எரிசக்தி தேவைப்பாட்டில் 70 வீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மூலம் பெற்றுக்கொள்வதே எமது எதிர்பார்ப்பு. மசகு எண்ணெய் பயன்பாட்டிலிருந்து படிப்படியாக விலகுவோம். 2050 ஆம் ஆண்டாகும் போது இலங்கை கார்பனிலிருந்து விடுபட்ட நாடாக மாற அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்காதிருப்பதற்கு இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பு, காலநிலை மாற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் கொள்கைக்கு வழங்கப்படுகின்ற பங்களிப்பாகும்
என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.