by Bella Dalima 25-09-2021 | 1:44 PM
Colombo (News 1st) நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை - கன்னியா, விளாங்குளம், பீலியடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பிரதான சந்தேகநபருக்கு குண்டை வடிவமைக்க உதவியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த 14 ஆம் திகதி நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்கின்றன.