பூகோள சவால்களுக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஐ.நா- வில் ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 24-09-2021 | 10:38 AM
Colombo (News 1st) பூகோள சவால்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகளின் உணவு கட்டமைப்பிற்கான மாநாட்டில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். தமது நாட்டு மக்கள் மற்றும் பூமியின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது அனைத்து அரச தலைவர்களினதும் நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். உணவு கட்டமைப்பை மேலும் வலுவாக்குவது மிக முக்கியமானது எனவும், உணவு பாதுகாப்பில் காணப்பட்ட பலவீனமானது கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வலுவான உணவு கட்டமைப்பானது இலங்கையின் சமூக, கலாசார, பொருளாதார மரபுரிமையாக காணப்படுவதாகவும் ஐ.நா உணவு கட்டமைப்பிற்கான மாநாட்டில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.