LTTE சந்தேகநபருக்கு O/Lபரீட்சையில் சிறந்த பெறுபேறு

சிறைச்சாலையில் இருந்து சாதாரண தர பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ள LTTE சந்தேகநபர்

by Staff Writer 24-09-2021 | 5:14 PM
Colombo (News 1st) சிறைச்சாலையில் இருந்து கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றிய LTTE சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் வட்டரெக்க மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் இருந்து 4 கைதிகள் தோற்றியிருந்தனர். இவர்களில் மெகசின் சிறைச்சாலையில் இருந்து பரீட்சையில் தோற்றிய LTTE கைதி ஒருவரும் மற்றுமொரு கைதியும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பலவேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சிறந்த பிரஜைகளாக சமூகத்தில் இணைப்பது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முக்கிய கடமைகளில் ஒன்று என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கைதிகளின் திறமைகள் குறித்து ஆராய்ந்து அவர்களது திறமையை மேம்படுத்தும் நோக்கில் தொழில் பயிற்சி, மத, கல்வி, சமூக ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுத்து, அவர்களை சமூகமயப்படுத்தி வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.