எண்ணெய் கொள்வனவிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் இலங்கை சலுகை கோரல்

எண்ணெய் கொள்வனவிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் இலங்கை சலுகை கோரல்

எண்ணெய் கொள்வனவிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் இலங்கை சலுகை கோரல்

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2021 | 6:19 pm

Colombo (News 1st)  எண்ணெய் கொள்வனவு தொடர்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் சலுகையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கோரியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி சுல்தான் அல் ஜாபரை அமெரிக்காவில் சந்தித்தபோது அமைச்சர் இந்த உதவியை கோரியதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி சுல்தான் அல் ஜாபரை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் சந்தித்துள்ளார்.

இலங்கையின் எண்ணெய் தேவை குறித்து கவனம் செலுத்தியதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து சலுகை ஏற்பாடுகளைக் கோரியதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சாதகமாக பதிலளித்த அமைச்சர் அல் ஜாபர், ஐக்கிய அரபு இராச்சியம் உதவிகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளதுடன், இந்த செயன்முறையை முன்னோக்கி எடுத்துச்செல்ல ஒரு மூலோபாயக் கட்டமைப்பை நிறுவுவதற்கு முன்மொழிந்துள்ளார்.

சர்வதேச கடல்சார் அமைப்பு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கையும் ஐக்கிய அரபு இராச்சியமும் பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.

2023 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டை நடத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் தனது பரிந்துரையை முன்வைத்துள்ளதாகவும் அதற்கு இலங்கையின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்