LPL:வௌிநாட்டு வீரர்களுக்கான பதிவு 24 முதல் ஆரம்பம்

LPL தொடரில் பங்கேற்கும் வௌிநாட்டு வீரர்களுக்கான பதிவு 24 ஆம் திகதி முதல் ஆரம்பம்

by Staff Writer 23-09-2021 | 7:21 PM
Colombo (News 1st) இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வௌிநாட்டு வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை (24) ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. பதிவு நடவடிக்கை ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையவுள்ளது. பதிவு செய்யப்பட்ட வீரர்களில் தகுதி பெறுபவர்கள் அனைவரும் வீரர்கள் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படுவதற்கான தகுதிகளாக, வௌிநாட்டு வீரர் ஒவ்வொருவரும் தமது நாட்டின் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ, முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவராகவோ, பாரிய T20 தொடருக்கான அணியில் இடம்பெற்றவராகவோ இருக்க வேண்டுமென்பது கட்டாயமாகும். அதேவேளை, அவர்களது நாட்டின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டியதும் அவசியமானதாகுமென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், இவ்வாண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 23 ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது. இந்த தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், ஒவ்வொரு அணியிலும் 20 வீரர்கள் அங்கம் வகிப்பார்கள். குழாத்தில் அங்கம் பெறும் 20 வீரர்களில் 14 பேர் உள்ளூர் வீரர்களாகவும் 6 பேர் வௌிநாட்டு வீரர்களாகவும் இருப்பரென்பது குறிப்பிடத்தக்கது.