பயங்கரவாதம் என்பது உலகளாவிய சவால்: ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி உரை

by Staff Writer 23-09-2021 | 10:22 AM
Colombo (News 1st) பயங்கரவாதம் என்பது உலகளாவிய சவால் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு நேற்றிரவு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை கூறினார். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கடும்போக்குவாத மத ரீதியிலான பயங்கரவாதிகளினால் ஏற்பட்ட அழிவை இலங்கை அனுபவித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்னதாக 2009 ஆம் ஆண்டு வரை இலங்கை மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாத யுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பயங்கரவாதம் என்பது உலகளாவிய சவால் எனவும் அதனை வெற்றிகொள்வதற்காக புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வது போன்ற விடயங்களில் சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி ஐ.நா பொதுச்சபையில் கூறினார். கடந்த அரை நூற்றாண்டு பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ​சுட்டிக்காட்டினார். அத்தகைய வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் இலங்கையில் இடம்பெறாதென்பதை உறுதிப்படுத்த தமது அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாகவும் COVID தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை கட்டியெழுப்ப உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து செயற்பட இலங்கை தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். புதிய வைரஸ் பிறழ்வுகள் பரவுவதை தடுப்பதற்காக தடுப்பூசி தயாரிப்பு, விநியோகம் மற்றும் அது சார்ந்த சவால்களை வெற்றிகொள்ள வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார். இதேவேளை, இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் தெரிவித்த ஜனாதிபதி, இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினதும் அளவையும் வலிமையையும் பொருட்படுத்தாது, நியாயமான முறையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டினார். COVID-19 பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்கான எதிர்பார்ப்புகளை கட்டியெழுப்பல், நிலையான நிலமையை மீண்டும் உருவாக்கல், உலக மக்களின் தேவைகளுக்கு பதில் வழங்கல், மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில் இம்முறை ஐ.நா. பொதுச்சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. இதேவேளை, உணவு கட்டமைப்பு மாநாட்டில் இன்று கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது கருத்துக்களை தெரிவிக்கவுள்ளார். நாளை (24) நடைபெறவுள்ள வலுசக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

ஏனைய செய்திகள்