கப்ராலின் பதவியை இரத்து செய்யக் கோரி மனு தாக்கல்

கப்ராலின் மத்திய வங்கி ஆளுநர் பதவியை இரத்து செய்யக் கோரி மனு உயர் நீதிமன்ற தாக்கல்

by Staff Writer 23-09-2021 | 6:57 PM
Colombo (News 1st) அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக செயற்படுவதை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தர, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மத்திய வங்கியின் துணை ஆளுநர் பெர்னாண்டோ உள்ளிட்டோர் குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியில் 10 மில்லியனுக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ள நிலையில், அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்படுவதால் அது தொடர்பிலான சாட்சிகளை அழிப்பதற்கு வாய்ப்பாக அமையும் என மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். நிதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டமையினால், பொதுமக்களின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டிய மனுதாரர்கள் இதனூடாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 2017 ஜனவரி 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலினூடாக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை நீதிமன்றத்திலும் சமர்ப்பித்து அது தொடர்பில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.