இலங்கை – இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் நியூயோர்க்கில் சந்திப்பு

இலங்கை – இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் நியூயோர்க்கில் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2021 | 7:36 pm

Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸிற்கும் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் பக்க அம்சமாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

COVID-19 பெருந்தொற்று மற்றும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும் வெற்றிகரமான நடவடிக்கைகள் தொடர்பில் பேராசிரியர் G.L.பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு இதன்போது விளக்கமளித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல், LTTE கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் காணாமற்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் சபை போன்ற சுயாதீன நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதி அமைச்சு என்பன ஒத்துழைப்புடன் செயற்படுவதாக வௌிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பல பிரிவுகளிலும் முன்னகர்த்துவதற்கு
வலுவான அரசியல் விருப்பம் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் G.L..பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களை அந்த நாடுகளின் அனுமதியின்றி செயற்படுத்த முடியாது என்ற அடிப்படையில், இலங்கை எடுத்திருக்கக்கூடிய கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, பல நாடுகளை பெரிதும் ஊக்குவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கி செல்லும் போது, வேறு எந்த வெளிப்புற பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதன்போது G.L.பீரிஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இரு நாடுகளினதும் நலன் கருதி, இனப்பிரச்சினைகளுக்கு பின்னர் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் நீதியான தீர்வுகள் அவசியம் என இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு வழிகளில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை விரைவுபடுத்தும் முகமாக, நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு இரு அமைச்சர்களும் இதன்போது இணங்கியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்