ஜனாதிபதியின் கருத்து வேடிக்கையானது: TELO அறிக்கை

வீட்டுக் கதவை பூட்டிவிட்டு விருந்தாளிகளை உணவருந்த ஜனாதிபதி அழைக்கிறார்: TELO அறிக்கை

by Bella Dalima 22-09-2021 | 8:27 PM
Colombo (News 1st) புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கையில் முதலீடு செய்வதை தான் வரவேற்பதாக ஜனாதிபதி கூறியிருப்பது 'வீட்டுக் கதவை இறுக்கி பூட்டி வைத்துவிட்டு விருந்தாளிகளை உணவருந்த உள்ளிருந்து அழைப்பது' போன்ற ஒரு செயற்பாடு என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் அமைப்புகள் பலவற்றை தடை செய்ததோடு, வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய உறவுகள் அச்சமடையக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டு, இங்கு வந்து முதலீடு செய்யலாம் என்று ஐ.நா செயலாளர் நாயகத்திடம் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருப்பதாக ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் ஒரு நாட்டை நோக்கி வருவதற்கான அரசியல் மற்றும் நிர்வாக சூழல் மிக அவசியம் என்பதை ஜனாதிபதி உணர்ந்துகொள்ள தவறியுள்ளதாக அறிக்கையில் சுரேந்திரன் குருசாமி குறிப்பிட்டுள்ளார். அரச நிர்வாகத்தில் இராணுவமயமாக்கல் தொடர்வதுடன், அரசியல் பிரச்சினைகள், மனித உரிமை விடயங்களில் அரசால் தீர்வு காணப்படாத நிலையில், உள்ளக பொறிமுறை ஊடாக நியாயமான தீர்வுகள் எந்த இனத்தவருக்கும் கிட்டாது என முழு நாடுமே உணர்ந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகள் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க, நீதி வழங்க உள்ளக பொறிமுறை தவறியுள்ளதாகவும் அவற்றுக்கு அரசு துணை போவதை எடுத்துக்காட்டியுள்ளதாகவும் TELO-வின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரசு இனியும் அரசியல் தீர்வு, மனித உரிமை, நீதி பொறிமுறை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை நிலைநாட்ட சர்வதேச சமூகத்துடன் ஒத்திசைந்து செயற்படத் தவறினால், அது நாட்டு மக்களை பாதாளத்திற்குள் தள்ளுவதாகவே அமையும் என ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.