கழிவு எண்ணெய் கடத்தல்: விசேட விசாரணை ஆரம்பம்

கப்பல்களில் இருந்து கழிவு எண்ணெய் கடத்தல்: விசேட விசாரணை ஆரம்பம்

by Bella Dalima 22-09-2021 | 12:07 PM
Colombo (News 1st) கப்பல்களில் இருந்து கழிவு எண்ணெய் கடத்தப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை பிரிவினால் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாட்டிற்கு பாரிய அந்நிய செலாவணி இழப்பையும் பாரிய சுற்றாடல் அழிவையும் ஏற்படுத்தி, நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் இந்த கடத்தலை நிறுத்தும் நோக்கில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் காரணமாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பு தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். கழிவு எண்ணெய் கொள்வனவு தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இதுவரை 27 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எண்ணெய் சுத்திகரிப்புடன் தொடர்புடைய 4 நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன. வருடாந்தம் நாட்டிற்கு வருகை தரும் கப்பல்களில் இருந்து 20,000 தொன் கழிவு எண்ணெய் வௌியேற்றப்படுகின்றது. அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள நிறுவனங்களினால் வருடாந்தம் 48,000 தொன் எண்ணெய் சுத்திகரிக்கப்படுகின்றது. எஞ்சிய 15, 200 தொன் எண்ணெய்க்கு என்ன நேர்கின்றது என்பது தௌிவின்மையினால் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.