ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரையாற்றவுள்ளார்

by Bella Dalima 22-09-2021 | 10:37 AM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (22) உரையாற்றவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. COVID-19 இல் இருந்து மீள்வதற்கான எதிர்பார்ப்புகளை கட்டியெழுப்பல், நிலையான நிலமையை மீண்டும் உருவாக்கல், உலக மக்களின் தேவைகளுக்கு பதில் வழங்கல், மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில் இம்முறை ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெறுகின்றது. நாளை நடைபெறவுள்ள உணவு கட்டமைப்பு மாநாடு மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள வலுசக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் என்பனவற்றிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது கருத்துக்களை தெரிவிக்கவுள்ளார். இதனிடையே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் குவைத் பிரதமர் ஷெயிக் சபா அல் ஹமாத் அல் சபாவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நியூயார்க் - மென்ஹாட்டனில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான 50 வருடகால நெருங்கிய தொடர்புகள், நட்புறவுடன் கூடிய இராஜதந்திர உறவுகள் தொடர்பில் நினைவுகூரப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதுமாத்திரமின்றி, இலங்கையர்கள் பலர் குவைத்தில் பணியாற்றுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தொழிற்பயிற்சிகளை பெற்றவர்களுக்கு மேலும் பல வாய்ப்புகளை வழங்குமாறு அந்நாட்டு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.