பிள்ளைகள் இலவச கல்வியை இழந்துள்ளனர் – எதிர்க்கட்சி தலைவர் 

பிள்ளைகள் இலவச கல்வியை இழந்துள்ளனர் – எதிர்க்கட்சி தலைவர் 

பிள்ளைகள் இலவச கல்வியை இழந்துள்ளனர் – எதிர்க்கட்சி தலைவர் 

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2021 | 9:54 pm

Colombo (News 1st) கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் தாமதப்படுத்துவதன் ஊடாக மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் – அதிபர்கள் சம்பள முரண்பாட்டிற்கு நியாயமான தீர்வை உடனடியாக வழங்கி மாணவர்கள் கல்வியை பெற்றுக் கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருத்தமான கொவிட் தடுப்பூசிகளை வழங்கி, மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உடனடியாக திறந்து கல்வியை பெறும் உரிமை மற்றும் அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் ஆட்சியாளர்களை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை ஆட்சி செய்கின்ற அரசாங்கத்துக்கும் அதன் தலைவர்களுக்கும் கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினையிலிருந்து இலங்கையை மீட்பதற்கு நியாயமான வேலைத்திட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமான கல்வித்துறை பிரச்சினைகளின் தற்போதைய மற்றும் எதிர்கால விளைவுகள் கடுமையாகவும் மிக மோசமாகவும் இருக்குமென இந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு தெரியாமலிருப்பது மற்றும் புரிந்துணர்வின்மை என்பன மிகவும் அருவருக்கத்தக்க விடயமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக அனுபவித்த இலவசக் கல்விச் சலுகையை நாட்டிலுள்ள வறுமையால் வாடும் பிள்ளைகள் இழந்துள்ளமை வேதனைக்குரிய விடயமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்