ஜனாதிபதி அமெரிக்காவை சென்றடைந்தார்

ஜனாதிபதி அமெரிக்காவை சென்றடைந்தார்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2021 | 9:20 am

Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா நோக்கி பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார்.

நியூயோர்க் நகரிலுள்ள ஜோன் F கெனடி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி மொஹான் பீரிஸ் வரவேற்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அரச தலைவர்கள் கூட்டம் நாளை மறுதினம் (21) இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாநாட்டில் உரை நிகழ்த்தவுள்ளார்.

கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நம்பிக்கையுடன் எதிர்த்து செயற்படுவதற்கான சூழலை கட்டியெழுப்புதல், நிலையான நிலமையை மீண்டும் உருவாக்கல், மக்களின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமகளை பாதுகாத்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பை மீள புத்துயர்பெற செய்தல் எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு நடைபெறவுள்ளது.

பொதுச்சபை கூட்டத்தின் வௌிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் நாளை (20) முற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் நியூயோர்க்கிற்கு வருகை தந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தில் அரச தலைவர்கள் சிலருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வௌிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்துடன் இணைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்