by Staff Writer 19-09-2021 | 9:22 AM
Colombo (News 1st) சேதனப் பசளையை இந் நாட்டுக்கு கொண்டுவரும் விலைமனு கோரலைப் பெற்ற சீன நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட பசளையின் மாதிரியில் பாதிப்புக்குரிய பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக தற்போது விரிவாக விவாதிக்கப்படுகின்றது.
சீன நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட பசளை மாதிரியை விவசாய திணைக்களத்தின் தாவர சோதனைப் பிரிவு நடத்திய பரிசோதனையில் அர்வீனியா எனப்படும் பாதிப்புக்குரிய பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது.
கிழங்கு, வெங்காயம், கரட் போன்ற மரக்கறிகளின் விளைச்சலை பாதிக்கச் செய்யும் தன்மை இந்த பக்டீரியாவுக்கு உள்ளது.
அத்தகைய பாதிப்புக்குரிய பக்டீரியா வகை, இந்த பசளை மாதிரியில் இல்லை என தர நிர்ணய சபை பெயரிட்ட சுயாதீன பரிசோதனைக்கூடம் நடத்திய பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதென நேற்று (17) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், நேற்றைய (17) ஊடக சந்திப்பில் பகிரங்கப்படுத்தப்பட்ட விடயங்களுக்கு அமைவாக இந்த சேதனப் பசளை பரிசோதனையில் அர்வீனியா போன்ற பக்டீரியாவை கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடல் பாசிகளால் தயாரிக்கப்பட்ட சேதனப் பசளையே சீன நிறுவனத்தால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இந்த உர மாதிரியில் இரசாயனமற்ற திரவம் அடங்கியிருக்கலாம் எனும் சந்தேகம் எழுவதாக பேராசிரியர் நாளிகா ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நமது நாட்டின் சட்டப் பிரகாரம் இதுபோன்ற பக்டீரியா அடங்கிய பொருட்கள் மாதிரியாகவேனும் கொண்டுவர முடியாது என துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சேதனப் பசளை மாதிரி பதல்கொட நெல் ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் நேற்றைய ஊடக சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
விவசாய அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியதை போன்று சேதனப் பசளையை நாட்டிற்கு கொண்டுவரும் விலைமனு கோரல் சீனாவின் க்விங்டாவோ சீவின் பயோடெக் குரூப் எனப்படும் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் க்விங்டாவோ துறைமுக நகரை அண்மித்து அவர்களுடடைய அதிவிசாலமான தொழிற்சாலை நடத்திச் செல்லப்படுகிறது.
20 வருட கால அனுபவத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் கடல் பாசியை பயன்படுத்திய சமுத்திரவியல் உர தயாரிப்பில் தாம் முன்னிலை அடைந்துள்ளதாக சீவின் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீனாவின் க்வின்டாவோ துறைமுக நகரத்தை அண்மித்து சுமார் 1700 சதுர கிலோமீட்டரில் பாதிப்புக்குரிய அல்கீ வளர்ந்துள்ளதாக கடந்த ஜூன் மாதம் ரொய்ட்டர் செய்தி சேவை உறுதிப்படுத்தியது.
15 வருட காலமாக இந்தப் பகுதியில் அல்கீ பிரச்சினை நிலவியதாகவும் அதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாவரங்களை அப்புறப்படுத்துவதற்காக சுமார் 12,000 படகுகள் பயன்படுத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான பின்புலத்தில் சேதனப் பசளை குறிப்பாக சீனாவிலிருந்து கொண்டுவரும் சேதனப் பசளையை பயன்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் எடுக்க வேண்டியதில்லையா?