பயண தடையை தொடர்ந்தும் அமுல்படுத்துங்கள் - PHI

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை

by Staff Writer 17-09-2021 | 11:25 AM
Colombo (News 1st) மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமாயின் மீண்டும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் அது நன்றாகப் பின்பற்றப்பட்டதாகவும் ஆனால் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் யாரும் கண்டுகொள்வதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அத்தியாவசிய சேவைகள் எவை என்பதை அடையாளம் காண முடியாத அளவிற்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, எதிர்காலத்தில் நாடு திறக்கப்படுமாயின் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளுடன் செயற்பட வேண்டும் என உபுல் ரோஹனா தெரிவித்துள்ளார். இதனிடையே, அதிகளவிலான அடையாளம் காணப்படாத கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் இருக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.