by Staff Writer 17-09-2021 | 7:41 PM
Colombo (News 1st) சீனாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட உர மாதிரியில் அர்வீனியா (Erwinia) எனப்படும் நுண்ணுயிர்கள் காணப்பட்டமை தொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (17) தௌிவுபடுத்தினார்.
உத்தியோகபற்றற்ற முறையில் சீனாவிலிருந்து பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட உர மாதிரியிலேயே நுண்ணுயிர்கள் காணப்பட்டதென அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இறக்குமதி செய்யும் நைட்ரஜன் உரத்தில் விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனிதனுக்கு பாதகமான நோய்க் கிருமிகள் இல்லை என விவசாய அமைச்சு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 14 ஆம் திகதி உறுதிப்படுத்தியது.
அவ்வாறு நுண்ணுயிர்கள் இருப்பதாக சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் வௌியாகும் செய்தி தவறானது என விவசாய அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட உரத்தை பயன்படுத்துவதற்கு தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என விவசாய அமைச்சு மக்களை கோரியுள்ளது.