செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் தலிபான் தலைவர்

Time இதழ் வௌியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் தலிபான் தலைவர்

by Bella Dalima 16-09-2021 | 6:04 PM
Colombo (News 1st): Time இதழின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் (The 100 Most Influential People of 2021) இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் தலிபான் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணை பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம்பெற்றுள்ளது. டோகாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தலிபான்கள் சார்பில் பங்கேற்றவரும், படை வெளியேற்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டவரும் அவர்தான். தலிபான்களின் அரசியல் முகமாக அவர் பார்க்கப்படுகிறார். உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலை Time இதழ் வெளியிட்டிருக்கிறது. அதில் பல்வேறு பிரிவுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. தலைவர்கள் என்ற பிரிவின் கீழ் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஷி ஜின் பிங், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தலைவர்களைப் பற்றிய குறிப்புகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அப்துல் கனி பராதரை பற்றிய குறிப்பை பாகிஸ்தான் பத்திரிகையாளர் அகமது ரஷீத் எழுதியுள்ளார். கடந்த ஆகஸ்டில் தலிபான்களுக்கு கிடைத்த வெற்றி, பராதர் நடத்திய பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி என்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாருக்கு மன்னிப்பு வழங்குவது போன்ற அனைத்து முக்கிய முடிவுகளையும் தலிபான் இயக்கத்தின் சார்பில் பராதரே எடுப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியைப் பற்றிய குறிப்பில், "அவர் நாட்டை மதச் சார்பின்மையில் இருந்து தூர விலக்கியிருக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு அரசியலை ஆக்கிரமித்திருக்கும் மூன்றாவது தலைவர் நரேந்திர மோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பற்றி, அவர், "கடும்போக்கு அரசியலின் முகமாக விளங்குகிறார்" என்று கூறப்பட்டுள்ளது. "அவர் கட்சியை வழிநடத்தவில்லை. அவர்தான் கட்சியே" என்கிறது Time இதழ் குறிப்பு.        

Source:BBC