NMRA தரவுகள் அழிவு: Epic Lanka Technologies நிறுவனம் பதில் 

by Staff Writer 16-09-2021 | 8:23 PM
Colombo (News 1st) தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முக்கிய தரவுகள் அழிந்த சம்பவம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டிய தகவல்களுக்கு Epic Lanka Technologies நிறுவனம் பதிலளித்துள்ளது. தமது செயற்றிட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய நிலைமையில், உடன்படிக்கைக்கு அமைய சட்ட வரைபிற்குள் இணைந்து தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தமது நிறுவனம், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையுடன் மாத்திரமே உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக, அறிக்கையொன்றின் மூலம் Epic Lanka Technologies நிறுவனம் கூறியுள்ளது. அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு அமைய, தமது நிறுவனம் eNMRA மென்பொருளை தயாரித்து, ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடம் ஒப்படைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு அமைய, மென்பொருள் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டமையை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை எழுத்து மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, Epic Lanka நிறுவனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மென்பொருளை தயாரித்து விநியோகித்தல் மற்றும் பராமரித்தல் மாத்திரமே தமது நிறுவனத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதால், ஏனைய அடிப்படை வசதிகள் மற்றும் முக்கிய வன்பொருள் விநியோகிக்கும் பொறுப்பு, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்குரியது எனவும் Epic Lanka நிறுவனம் சார்பில் அறிக்கையொன்றை வௌியிட்டு, உதவி உப தலைவர் ரிஷான் வன்னிஆரச்சி கூறியுள்ளார். Sri Lanka Cloud என்பது இலங்கையின் இரகசியத்தன்மையும் பாதுகாப்பும் பேணப்பட வேண்டிய தகவல்கள் அடங்கிய கட்டமைப்பாகும். அதனை பாதுகாத்து பேணுவதற்கான நிர்வாக பொறுப்பு ICTA நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. Epic Lanka நிறுவனம் NMRA தரவுக் கட்டமைப்பிற்கான சேவை வழங்குநராக செயற்படுகிறது. இந்த பின்புலத்தில் ICTA நிறுவனத்திடமுள்ள இலங்கை அரசாங்கத்தின் Cloud-இல் NMRA தரவுகள் அழிந்ததாக 2021 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி தகவல் வௌியானது. அது பொறியலாளர் ஒருவர் தவறுதலாக மேற்கொண்ட நடவடிக்கையால் ஏற்பட்டதாக NMRA நிறுவனத்தின் சேவை வழங்குநரான Epic Lanka நிறுவனம் கூறுகின்றது. இதற்கமைய, NMRA-இன் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டிய கட்டமைப்பின் ஒரு பகுதியை இழக்க நேரிட்டுள்ளது. COVID தொற்று நிலைமைக்கு மத்தியில் NMRA-இன் தரவுக்கோவையொன்றும் காணாமற்போனதாக தகவல் வௌிக்கொணரப்பட்டது. எவ்வாறாயினும், COVID-19 தொற்றுடன் தொடர்புடைய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பிலான தகவல்களின் ஒரு பகுதி மெனுவலாக எழுதிவைக்கப்பட்டுள்ளதாக NMRA தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இணையத்தளம் ஊடாக தகவல்களை பதிவேற்றம் செய்யுமாறு COVID நிலைமை ஆரம்பமான போது NMRA நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது. தரவுகள் அழிந்தமை தொடர்பிலான வழக்கின் ஆரம்பத்தில், கட்டமைப்பை புதுப்பிக்கும் நடவடிக்கையை இடைநிறுத்தி நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அடுத்த தவணையின் போது அந்த உத்தரவு இரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ICTA நிறுவனம் அரச Cloud-ஐ புதுப்பித்ததுடன், அதன்போது அரசாங்கத்தின் மேலும் பல இணையத்தளங்கள் முடங்கின. இந்த சிக்கல் தொடர்பில் Sri Lanka Cloud-இல் தடயவியல் விசாரணை நடத்தி விடயங்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு இருந்த வாய்ப்பும் தற்போது அற்றுப்போயுள்ளதா என்ற சந்தேகம் மேலோங்குகின்றது. Epic Lanka நிறுவனத்தின் பொறியியலாளர் ஒருவர் தவறுதலாக செய்த விடயம் காரணமாக அரசாங்கத்தின் cloud-இல் இருந்த இரகசியத்தன்மை பேணப்பட வேண்டிய கோவை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாதவாறு அழிந்தமைக்கு, Backup அல்லது அவசர நிலைமையின்போது நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நடைமுறையொன்று இருக்காமையே காரணம் என்பது உறுதியாகியுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியவாறு, இது மருந்து மாஃபியாவின் ஒரு அங்கமா என்ற சந்தேகமும் எழுகிறது. நாட்டில் உள்ளோரின் இரகசியத்தன்மையை பாதுகாக்கும் தகவல்களை உள்ளடக்குவதற்காகவே அரசாங்கங்கள் Cloud கட்டமைப்பை உருவாக்குகின்றன. அதில், தேசிய அடையாள அட்டை தகவல்கள், காணி உறுதிகள், வரைபடங்கள், வங்கி கணக்கு இலக்கங்கள், நீதிமன்றத் தகவல்களைக் கூட உள்ளடக்க முடியும். நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த தரவுக்கட்டமைப்பிற்குள் தனி ஒருவர் பிரவேசித்து தரவுகளை Delete செய்ய முடியுமாயின் எதிர்காலத்தில் அனைவரினதும் தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது யார்?

ஏனைய செய்திகள்