அணி வீரர்கள் மீதான குற்றச்சாட்டை SLC நிராகரிப்பு

இலங்கை அணி வீரர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

by Staff Writer 16-09-2021 | 5:17 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவிற்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்ட இலங்கை அணி வீரர்கள் சிலர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிராகரித்துள்ளது. தென்னாபிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் வீரர்கள் சிலர் குறைந்த திறமையை வௌிப்படுத்தி, போட்டியில் தோல்வியடைவதற்கு காரணமாக அமைந்ததாக செய்திகள் வௌியாகின. அவ்வாறான செய்தி தொடர்பில் அணி முகாமைத்துவத்தினால் தமக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரிலும் இருபதுக்கு இருபது தொடரிலும் ஒரே அணியின் உறுப்பினர்களே பங்குபற்றியதாக, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் தொடரில் வெற்றி பெற்ற இலங்கை அணி, உலகக்கிண்ண லீக்கின் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலத்தில் போட்டிகளில் வெற்றி பெற்று, வெற்றிப்பாதையை நோக்கிச் செல்வதாகவும் ஊடக ஒழுக்கத்திற்கு மதிப்பளித்து சரியான செய்திகள் வௌியிடப்படாவிட்டால், உலகக் கிண்ண தொடரில் கலந்துகொள்ளவுள்ள அணியின் மனோதிடம் பாதிக்கப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.