by Bella Dalima 16-09-2021 | 7:08 PM
Colombo (News 1st) அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
தமிழ் கைதிகளை சந்திப்பதற்காக இன்று அங்கு சென்றிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து, சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு பேசி, சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் உள்ளே செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமிழ் கைதிகள் அனைவரையும் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் இரண்டு கைதிகளை மாத்திரமே சந்திக்க முடிந்ததாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
மேலும், சிறையில் உள்ள தமிழ் கைதிகள் தமது பிரதேசங்களுக்கு அருகில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றி தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரியதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார்.
அவர்களின் கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்கவுள்ளதாகவும் அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ரொஹான் ரத்வத்தே இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும் வேறு பதவிகளை வகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் குறிப்பிட்டார்.
சகல பதவிகளில் இருந்தும் அவர் விலக்கப்பட வேண்டும் எனவும் அவரின் கைத்துப்பாக்கி மீள பெறப்பட வேண்டும் எனவும் M.A.சுமந்திரன் வலியுறுத்தினார்.
இதேவேளை, எதேச்சாதிகாரத்துடன் அரசு செயற்படுவதும் சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் மீறப்படுவதும் கவலையளிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.