இலங்கை - காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: புதுச்சேரி முதல்வருடன் கலந்துரையாடல்

by Staff Writer 16-09-2021 | 2:01 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கண்டு, நல்லுறவை வளர்ப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி மீனவளத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களும் அரச உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.