NMRA தரவுகள் அழிப்பு: சூத்திரதாரியை அம்பலப்படுத்துமாறு முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தல்

by Staff Writer 15-09-2021 | 9:05 PM
Colombo (News 1st) ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடமிருந்த (​NMRA) முக்கிய தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்கு முன்னிலை சோசலிசக் கட்சி இன்று ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு சென்றிருந்தது. தரவுகள் அழிந்தமை தொடர்பிலான உண்மைத் தகவல்களை தெரிவிக்குமாறு, தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக முன்னிலை சோசலிசக் கட்சி அறிக்கையொன்றை முன்வைத்துள்ளது. மேலும், பெறுமதியான தரவுகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்தது ஏன் எனவும் பாதுகாப்பு கணக்காய்வு செய்யப்படாதது ஏன் எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன், தரவுகள் அழிக்கப்பட்டமைக்கும் புதிய தலைவர் நியமிக்கப்பட்டமைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் அக்கட்சி வினவியுள்ளது.
இது ஔடத கொள்ளையர்களின் சூழ்ச்சி என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தீலிப பீரிஸ் நேற்று (14) மன்றில் தெரிவித்தார். இது ஔடத கொள்ளையர்களின் சூழ்ச்சியென்றால் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பெரிதாக பேசி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வெட்கமடைய வேண்டும். அரச தரவு களஞ்சியத்திற்குள் நுழைந்து கொள்ளையர்களால் தரவுகளை அழிக்க முடியுமாயின், நாம் வெட்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் நான்கு இணையத்தளங்கள் அழிக்கப்பட்டன. Cloud-க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடைசி சந்தர்ப்பத்தில் Recovery செய்வதற்கு எடுத்த முயற்சிகளாலும் மேலும் சில தரவுகள் அழிந்துள்ளன
என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜாகொட குறிப்பிட்டார். Sri Lanka Cloud-இல் இருந்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிந்தமை தொடர்பாக கடந்த சில தினங்களாக நியூஸ்ஃபெஸ்ட் பல தகவல்களை வௌிக்கொணர்ந்தது. இது தொடர்பில் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடம் வினவியபோது, இந்த சம்பவத்திற்கான நேரடி பொறுப்பு Epic Lanka Technology நிறுவனத்திற்கே உள்ளதாக பதிலளிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மே மாதம் இந்த விடயம் தொடர்பாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமும், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையும், Epic Lanka Technology நிறுவனமும் ஏற்படுத்திக்கொண்ட முத்தரப்பு உடன்படிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  • உடன்படிகை செல்லுபடியாகும் காலம் - 5 வருடங்கள்
  • நிறுவனம் தகவல்களின் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்திற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
  • கட்டமைப்பு தடைப்படுகின்ற சந்தர்ப்பங்களில் விரைந்து செயற்பட வேண்டும்
  • Backup-களை தொடர்ச்சியாக பேண வேண்டும்
  • கட்டமைப்பின் மென்பொருட்கள் மற்றும் வன்பொருட்களுக்கான முழு பொறுப்பும் உள்ளது
இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்திற்கான பொறுப்புகள்
  • Epic Lanka Technology நிறுவனத்திற்கு தேவையானவாறு ஆலோசனை சேவைகளை வழங்க வேண்டும்.
தமது பணிக்குழு உறுப்பினர் ஒருவரின் தவறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக Epic Lanka Technology நிறுவனம் கூறியுள்ளது. இந்த குற்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியது Epic Lanka Technology நிறுவனமா? அல்லது இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமா? ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்ற அதிகாரிகள், தொடர்ச்சியாக நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி பணத்தை ஈட்டுகின்றனர். இவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்ளும் போது மருந்து மாஃபியா கடத்தற்காரர்கள், அந்த சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள் அல்லவா? இந்த சம்பவத்தின் பின்புலத்தில் உள்ள மறைமுக சக்தி மற்றும் சூத்திரதாரிகள் யார் என்ற கேள்விகளையே மக்கள் முன்வைக்கின்றனர்.